மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்களில் இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரேவதி சம்பத், கடந்த 2016-ல் மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னதாக, இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, ரியாஸ் கான் போன்ற பலர் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்களில் இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் மேலும் இது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.