

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சிறக்கடிக்க ஆசை தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியில் பலரது அபிமான தொடராக இருப்பது சிறகடிக்க ஆசை. இதில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் ஏற்கெனவே பாக்கியலட்சுமி, பனிவிழும் மலர்வனம் உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்துள்ளார்.
ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று (டிச. 11) இரவு அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஸ்வரியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த சைதாப்பேட்டை காவல்துறையினர், அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராஜேஸ்வரியின் மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Serial Actress Rajeswari of Sirakadikka Aasai aired on Vijay TV committed suicide