நான் தமிழன், எங்கு போனாலும் தமிழில் பேசுவேன் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில கருத்துகளைப் பதிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பேசியதும் உண்மையான ஆன்மிக குரு யார் என்பது குறித்து பேசியதும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து செல்வராகவன் பேசியுள்ளார்.
செல்வராகவன் பேசியதாவது
“தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தமிழ் இனி மெல்ல சாகும் என்று பாரதியார் சொன்னார், அதற்கேற்ப தமிழ் ஐசியூவில் படுத்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆங்கிலம்தான். ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட ஆங்கிலம் பேச முயற்சி செய்கிறார்கள். தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவதன் முக்கியத்துவம் எனக்கு புரிகிறது. ஆங்கிலம் தெரியாமல் நான் பள்ளி, கல்லூரியில் அவமானப்பட்டிருக்கிறேன்.
இதன் பிறகு மிகவும் ஆர்வத்துடன் ஆங்கிலப் புத்தகங்கள், நாளிதழ்களைப் படித்து ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டேன். இப்போதும் நான் சரியாக பேசுகிறேனா என்று தெரியவில்லை, ஆனால் அதை பற்றி எனக்கு கவலையில்லை. நான் தமிழன், எங்கு போனாலும் தமிழில் பேசுவேன். நீங்களும் எங்கு போனாலும் தலை நிமிர்ந்து தமிழில் பேசுங்கள். மற்றவர்கள் அவமானமாக பார்த்தால் குரலை உயர்த்திப் பேசுங்கள்.
உலகத்தில் உள்ள அனைவரும் தங்களின் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் பேசுகிறார்கள். தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். உலகின் பழமையான மொழி தமிழ் மொழி”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.