
மும்பை பாத்ராவிலுள்ள சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இருவேறு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் சத்தீஸ்கரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்பதும் மற்றொருவர் 32 வயது பெண் என்பதும் தெரியவந்துள்ளது. இளைஞர் செவ்வாய்க்கிழமையும் பெண் புதன்கிழமையும் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
காவல் துறையினர் கூறுகையில், முதலில் அந்த இளைஞர் சல்மான் கான் வீட்டின் வாசலில் வந்து நின்று ரசிகர் என்று கோரியுள்ளார். சல்மான் கானைச் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். காவலர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர் கோபத்தில் செல்ஃபோனை உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இவர் மீண்டும் இரவு 7.30 மணியளவில் திரும்பியுள்ளார். அப்போது வாகனம் ஒன்றைத் தடுத்து நிறுத்தி வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால், காவல் அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதான வாசலிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இவர் வீட்டுக்குள் நுழையவில்லை என மும்பை காவல் துறையினர் உறுதி செய்தார்கள். பாந்த்ரா காவல் துறையினர் இவரைக் கைது செய்துள்ளார்கள்.
இதேபோல, வேறொரு சம்பவத்தில் பெண் ஒருவரும் சல்மான் கான் வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். இவரும் சல்மான் கான் வீட்டுக்குள் நுழையத் தொடர்ச்சியாக முயற்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவரும் தற்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 14 முதல் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்தாண்டு லாரன்ஸ் பிஷ்னாய் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகக் கூறப்படும் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து சல்மான் கான் இல்லத்தின் வெளியே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார்கள்.
பிஷ்னாய் கூட்டத்தைச் சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் இருப்பதால், மும்பை காவல் துறையினரால் சல்மான் கானுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.