மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மற்றொரு நடிகை அளித்த புகாரின்பேரில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடுபுழா காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்படவுள்ளது.
மலையாள திரைத் துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஹேமா குழு தயாரித்த அறிக்கை கடந்த 19 அன்று வெளியானது. இந்த அறிக்கையில், மலையாள திரைத் துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இதன் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழு முழுவதுமாகக் கலைக்கப்பட்டது.
ஹேமா குழு அறிக்கை வெளியான பிறகு, கேரள அரசு 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இதன் தொடர்ச்சியாக, மலையாள திரைத் துறையிலிருந்து பெண்கள் வெளிப்படையாக புகார்களைத் தெரிவிக்க முன்வரத் தொடங்கினார்கள். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெயசூர்யா மீது இன்று மற்றொரு நடிகை அளித்த புகாரின் பேரில் இரண்டாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடைய வாக்குமூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு நேற்று பதிவு செய்தது.
புகாரளித்த நடிகை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"2013-ல் நான் திரைத் துறைக்குள் நுழைந்தேன். ஓரிரு படங்களில் நடித்த பிறகு இந்தச் சம்பவம் எனக்கு நேர்ந்தது. தொடுபுழாவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்புத் தளத்துக்கு நான் வந்தவுடன், வழக்கத்துக்கு மாறாக துணை நடிகையான எனக்கு மரியாதை கிடைத்தது. என் சமூக செயற்பாடுதான் இதற்குக் காரணம். படத்தின் இயக்குநரே என்னிடம் வந்து கைகுலுக்கிச் சென்றார். பிறகு அவர் முன்னணி நடிகர்கள், நடிகைகளிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
நான் கழிவறைக்குச் சென்று திரும்பிய பிறகு யாரோ என்னைப் பிடித்தார்கள். நான் அதிர்ந்துவிட்டேன். பிறகு அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். படங்களில் வேலை பார்த்தாலும் பணம் தாமதமாகச் செலுத்தப்பட்டன. செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் வெளியான பிறகு படத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன்" என்றார் அவர்.