
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்வதாகக் கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அது இன்று (செப். 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் வரும் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் ஏற்படுத்திய மன உளைச்சல், பொது வெளியில் அவரைப் பற்றி அவதூறாகப் பேசியது உள்ளிட்ட செயல்களை நீதிபதிகள் கண்டித்தனர்.
மேலும், மன்னிப்பு கேட்கத் தவறினால் சீமானைக் கைது செய்ய தற்போது இருக்கும் தடை நீக்கப்படும் என்றும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு ரத்து செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டது. வருங்காலத்தில் நடிகை விஜயலட்சிமியைப் பற்றி அவதூறாகப் பேசக் கூடாது என்றும் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 24-க்கு ஒத்தி வைத்து வைத்தனர்.
Seeman | Vijayalakshmi | NTK |