மகாராஜா படத்தில் நான் நடிக்காததற்கு என் தந்தை காரணம் இல்லை என்று சாந்தனு விளக்கம் அளித்துள்ளார்.
2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.
இப்படம் கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்நிலையில், நித்திலன் சாமிநாதன் சமீபத்தில் சாய் வித் சித்ரா சேனலுக்கு அளித்த பேட்டியில், “மகாராஜா கதையை ஆரம்பத்தில் சாந்தனுவிடம் சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் என்னை பேச சொன்னார். ஆனால், எந்த தயாரிப்பாளரும் படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை. இதன் பிறகு இப்படம் தள்ளிச் சென்று கொண்டிருந்த காரணத்தால் குரங்கு பொம்மை படத்தை இயக்கினேன். அந்த படத்தை முடித்த பிறகு மகாராஜா படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கினேன்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சாந்தனு அவருடைய தந்தை பாக்யராஜ் சொல்லித் தான் மகாராஜா படத்தை நிகாரித்துள்ளார் என்று விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சாந்தனு.
அவர் கூறியதாவது: “முதலில் மகாராஜா படத்துக்காக உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று கொண்டிருக்கும் நித்திலனுக்கு வாழ்த்துகள். 10 ஆண்டுகளுக்குப் பிறகும் இதனை நினைவுப்படுத்தி பேசியதற்கு நன்றி.
நான் மகாராஜா படத்தில் நடிக்காததற்கு அந்த நேரத்தில் எந்த தயாரிப்பாளரும் படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை என்பது தான் காரணம். என் அப்பாவுக்கு நித்திலன் என்னை அணுகியதே தெரியாது. எனவே, அப்படத்தில் நான் நடிக்காததற்கு என் தந்தையோ அல்லது நானோ காரணம் இல்லை. நான் எப்பவும் நல்ல கதைகளில் நடிக்க விருப்பப்படுகிறேன். நேரம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்” என்றார்.