
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைகுரிய பாடலை நீக்கக்கோரியும், அதற்காக ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜகவின் ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள `டெவில்ஸ் டபுள் (டிடி) நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை மறுநாள் (மே 16) வெளியாக உள்ளது.
ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் தொடர்பாக மாநிலம் கடந்து உருவான சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. ஆஃப்ரோ இசையமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள `கிஸ்ஸா 47’ பாடல் யூடியூபில் வெளியானதும், சர்ச்சை கிளம்பியது.
`ஸ்ரீனிவாச கோவிந்தா ஸ்ரீவெங்கடேச கோவிந்தா’ என்ற மந்திரம் இந்த பாடலின் தொடக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த மந்திரத்தின் உச்சரிப்பு மெட்டை அடிப்படையாக வைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் வார்த்தைகள் கலப்பில் இந்த பாடலில் அமைந்திருந்தது.
அண்மையில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இது குறித்து விளக்கமளித்த சந்தானம், தாம் பெருமாளின் தீவிர பக்தன் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் இந்தப் பாடலின் நோக்கம் முற்றிலும் பக்தி சார்ந்தது என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், கிஸ்ஸா 47 பாடலுக்கு, ஆந்திர மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டியும், திருப்பதியின் ஜன சேனா கட்சிப் பிரமுகருமான கிரணும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பாடலை நீக்கக்கோரி சந்தானத்திற்கும், படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அளித்துள்ளார்.
பாடல் வரிகள் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும், ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்ளதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுதுள்ளது. அத்துடன் பாடலை நீக்காவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.