
திரையரங்கு கூட்டநெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் காவல் துறையினர் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினார்கள்.
ஹைதராபாதில் புஷ்பா 2 வெளியீட்டின்போது, டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். இவருடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் திரையரங்க நிர்வாகம் உள்பட அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தால் 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார் அல்லு அர்ஜுன். எனினும், தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவிட்டது. இதன் காரணமாக ஓர் இரவை மட்டுமே சிறையில் கழித்தார் அல்லு அர்ஜுன்.
அண்மையில், தெலங்கானா சட்டப்பேரவையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனைக் கடுமையாக சாடி விமர்சித்தார். காவல் துறை அனுமதி கொடுக்காதபோதிலும், விதிகளை மீறி அல்லு அர்ஜுன் திரையரங்குக்குச் சென்றதாகவும், பெண் உயிரிழந்தது அறிந்தும் படத்தைப் பார்க்கவே அல்லு அர்ஜுன் விரும்பியதாகவும் குற்றம்சாட்டினார்.
தெலுங்கானா முழுக்க அல்லு அர்ஜுன் விவகாரம் தீவிரமடைந்தது. உடனடியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜுன் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கமளித்தார். திரையரங்கு நிர்வாகம் சார்பில் காவல் துறை அனுமதி பெறப்பட்டதாக அவர் கூறினார். மேலும், பெண் உயிரிழந்த விவகாரம் தனக்கு அடுத்த நாளே தெரிய வந்ததாகவும் அல்லு அர்ஜுன் கூறினார்.
ரேவந்த் ரெட்டி vs அல்லு அர்ஜுன் எனப் பேசப்பட்டன. அல்லு அர்ஜுன் வீட்டில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. தாக்குதலை நடத்தியவர் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்த புகைப்படம் கசிந்ததால், இதன் பின்னணியில் ரேவந்த் ரெட்டி இருக்கலாம் என அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை வைத்தார்கள்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அல்லு அர்ஜுனுக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதன்படி, தந்தை அல்லு அரவிந்த் மற்றும் வழக்கறிஞர்களுடன் அல்லு அர்ஜுன் இன்று காலை 11 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
பிற்பகல் 2.45 மணி வரை அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடைபெற்றது. மத்திய மண்டல காவல் துறை துணை ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் தலைமையிலான காவல் துறையினர் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்தினார்கள்.
சுமார் 3.45 மணி நேர விசாரணைக்குப் பிறகு அல்லு அர்ஜுன் வீடு திரும்பினார்.