தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து அறிக்கை வெளியிடுமாறு தெலங்கானா அரசுக்கு நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் காவல் துறையினர் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீதும், நடிகர் ஜெயசூர்யா மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து அறிக்கை வெளியிடுமாறு தெலங்கானா அரசுக்கு சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “தெலுங்கு திரையுலகில் உள்ள பெண்கள் அனைவரும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறோம்.
இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ என்கிற அமைப்பு 2019-ல் உருவாக்கப்பட்டது.
எனவே பாலியல் தொல்லை தொடர்பான அறிக்கையை வெளியிட தெலங்கானா அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இதனை வெளியிடுவதன் மூலம் திரையுலகில் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்” என்று பதிவிட்டுள்ளார்.