
சிக்கந்தர் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் மதராஸி படம் ‘பெரிய’ வெற்றி பெற்றிருக்கிறது என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் விமர்சித்தார்.
இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் 19-வது ஆண்டு நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இதில், கடந்த வார நிகழ்ச்சியின்போது நகைச்சுவை நடிகர் ரவி குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சல்மான் கானிடம் ரவி குப்தா பல கேள்விகளைக் கேட்டார். அப்போது, எந்தப் படம் நடித்ததற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சில படங்களைப் பட்டியலிட்ட சல்மான் கான், தனது சிக்கந்தர் படம் தோல்விப் படம் அல்ல என்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“இப்போது நான் நடித்த எந்தப் படத்திற்கும் வருத்தப்படவில்லை. சிக்கந்தரை நான் சொல்வேன் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படத்தின் கதைக்களம் நன்றாகவே இருந்தது. நான் படப்பிடிப்புக்கு இரவு 9 மணிக்கு மேல் வந்ததே அப்படத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார். அப்போது எனக்கு நெஞ்செலும்பு உடைந்திருந்தது. அதனால்தான் நான் தாமதமாக வந்தேன். அதே இயக்குநர் இப்போது தமிழில் மதராஸி படத்தை இயக்கி இருக்கிறார். அதில் நடித்தவர் காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு வரக்கூடியவர். அந்தப் படம் சிக்கந்தர் படத்தை விட பெரிய அளவிலான வெற்றிப்படம்” என்றார்.
சமீபத்தில் சிக்கந்தர் படம் வெளியானதும் வலைப்பேச்சு வாய்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி அளித்தபோது, “சல்மான் கான் இரவு 8 மணிக்குத் தான் படப்பிடிப்புக்குத்தான் வருவார். இரவு நேரத்தில் பகலுக்கான காட்சிகளை எடுக்க வேண்டியதாக இருந்தது. மற்ற நடிகர்களுக்கும் சிரமமாகப் போனது. குழந்தைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகள் இரவு 2 மணிக்கு எடுத்தோம்” என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சல்மான் கான் மதராஸி வெற்றியை விமர்சித்துள்ளார்.