சயிஃப் அலிகான் மருத்துவக் காப்பீடு சர்ச்சை: இணையவாசிகள் ஆதங்கம்!

இத்தகைய செயலால் மருத்துவக் காப்பீடுகளுக்கான பிரீமியங்கள் உயர்ந்து, அதனால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
வீடு திரும்பிய சயிஃப் அலிகான்
வீடு திரும்பிய சயிஃப் அலிகான்ANI
1 min read

கத்திக்குத்து காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மருத்துவக் காப்பீடு தொடர்பான விவரங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அது தொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் இணையவாசிகள்.

மும்பை பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. கடந்த ஜன.15-ம் தேதி இரவில் இந்தக் குடியிருப்புக்குள் நுழைந்த திருடனை அவர் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் திருடனிடம் கத்திக்குத்து பெற்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சயிஃப் அலிகான்.

சிகிச்சை முடிந்து, நேற்று (ஜன.21) சயிஃப் அலிகான் வீடு திரும்பிய நிலையில், அவரது மருத்துவக் காப்பீடு தொடர்பான விவரங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியானது.

தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் ஏற்கனவே மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளார் சயிஃப் அலிகான். இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சம்மந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திடம் ரூ. 35 லட்சத்து 97 ஆயிரத்தை அவர் கோரியுள்ளார். இதைத் தொடர்ந்து ரூ. 25 லட்சத்திற்கு காப்பீடு நிறுவனம் ஒப்புதல் வழங்கிய நிலையில், சிகிச்சை கட்டணமாக ரூ. 26 லட்சத்தை வசூலித்துள்ளது மருத்துவமனை.

இந்த விவரங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. குறிப்பாக, மும்பை துங்கா மருத்துவமனையில் பணியாற்றிவரும் இதய நிபுணரான மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா, தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் கூறியதாவது,

`சிறிய மருத்துவமனைகளுக்கும், சாமானியர்களுக்கும் அந்த காப்பீடு நிறுவனம் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சத்திற்கும் மேல் ஒப்புதல் வழங்காது. ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் அதிகப்படியான சிகிச்சை கட்டணங்களை வசூலித்தும், காப்பீடு நிறுவனங்கள் அவற்றுக்கு ஒப்புதல் வழங்குகின்றன. இதனால் மருத்துவக் காப்பீடுகளுக்கான பிரீமியங்கள் உயர்ந்து, நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர்’ என்றார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து, இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in