மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சயிஃப் அலி கான் நேரில் அழைத்துச் சந்தித்துள்ளார்.
மும்பையில் மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான். கடந்த ஜனவரி 15 அன்று இரவில் அவரது இல்லத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சயிஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துச் சென்றார்.
பலத்த காயமடைந்த சயிஃப் அலி கான், ஆட்டோ மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரின் பெயர் பஜன் சிங் ராணா.
லீலாவதி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட சயிஃப் அலி கான், நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிய ஆட்டோ ஓட்டுநரை சயிஃப் அலி கான் நேரில் அழைத்துச் சந்தித்துள்ளார்.
சயிஃப் அலி கானை சந்தித்தது பற்றி பஜன் சிங் ராணா கூறியதாவது:
"பிற்பகல் 3.30 மணிக்கு வருமாறு கூறினார்கள். சற்று தாமதமாகச் சென்றேன். சுமார் 4-5 நிமிடங்கள் தாமதமாகச் சென்றேன். பிறகு, அவரைச் சந்தித்தேன். உள்ளே சென்றபோது, அவருடையக் குடும்பத்தினர் இருந்தார்கள். அனைவரும் வருத்தத்தில் இருந்தார்கள். அனைத்தும் நல்லவிதமாகச் சென்றது. அவருடையத் தாயாரும், குழந்தையும் இருந்தார்கள். என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.
இன்று அழைத்திருந்தார்கள். சிறப்பான சந்திப்பு ஒன்றும் அல்ல, சாதாரண சந்திப்புதான். 'விரைவில் குணமடையுங்கள், உங்களுக்காக ஏற்கெனே பிரார்த்தனை செய்துள்ளேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன்' என்று அவரிடம் கூறினேன்" என்றார் ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா.
சயிஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஸாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.