
பிரபல பாலிவுட் நடிகரின் சயிஃப் அலி கானின் வீட்டுக்குள் புகுந்த திருடன், அவரைக் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட சயிஃப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூரின் மகனான சயிப் அலி கான் பாலிவுட்டில் பிரபல நடிகராக உள்ளார். இவருடைய மனைவி கரீனா கபூரும் புகழ்பெற்ற நடிகை. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள்.
மும்பை பந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ள சயிஃப் அலி கான் - கரீனா கபூரின் வீட்டினுள் இன்று அதிகாலை 2.30 மணிக்குப் புகுந்த திருடன், அங்கிருந்த பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளான். இதையடுத்து, சத்தம் கேட்டு தனது அறையை விட்டு வெளியே வந்த சயிஃப் அலி கானைக் கண்டவுடன் அவருடைய உடலில் ஆறு முறை கத்தியால் குத்தி, திருடன் தப்பிச் சென்றுள்ளான்.
இச்சம்பவத்தால் கலவரமடைந்த குடும்பத்தினர், சயிஃப் அலி கானை மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றார்கள். அங்கு, அவருக்கு இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதையடுத்து கரீனா கபூர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சயிஃப் அலி கான் - கரீனா கபூரின் வீட்டினுள் புகுந்த ஒருவன் திருட முயன்றுள்ளான். இச்சம்பவத்தில் சயிஃப் அலி கானின் தோளில் காயம் ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதர குடும்ப உறுப்பினர்கள் நலமாக உள்ளார்கள். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.