ஸ்பாடிஃபை டாப் 10 பட்டியல்: அனிருத்தைப் பின்னுக்குத் தள்ளிய சாய் அப்யங்கர் | Sai Abhyankkar |

அறிமுக இசையமைப்பாளராக சாய் அப்யங்கரின் இரண்டு பாடல்கள் ஸ்பாடிஃபை பட்டியலில் இடம்பெற்றுள்ளது...
ஸ்பாடிஃபை டாப் 10 பட்டியல்: அனிருத்தைப் பின்னுக்குத் தள்ளிய சாய் அப்யங்கர்
ஸ்பாடிஃபை டாப் 10 பட்டியல்: அனிருத்தைப் பின்னுக்குத் தள்ளிய சாய் அப்யங்கர்
1 min read

ட்யூட் படத்தின் ஊறும் பிளட் பாடல் ஸ்பாடிஃபை செயலியில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த அக்டோபர் 17 அன்று வெளியானது ட்யூட். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜு நடித்துள்ளார். காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில், பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார், ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்துள்ளது.

ஊறும் பிளட் பாடல்

ட்யூட் படத்தின் முதல் சிங்கிளான ‘ஊறும் பிளட்’ பாடல், கடந்த செப்டம்பர் 28 அன்று வெளியானது. இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் முதல் சினிமாப் பாடலாக வெளியான இது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ராப் இசைக்கலைஞரான பால் டப்பாவின் வரிகளுடன் இப்பாடல் 2கே கிட்ஸின் பிடித்தமான பாடலாக மாறியது. இதனால், யூடியூபில் வெளியான இதன் காணொளி ஒரு வாரத்தில் 10 கோடி பார்வைகளைக் கடந்தது. தற்போது யூடியூபில் 14.13 கோடிகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

ஸ்பாடிஃபையில் முதலிடம்

இந்நிலையில் அதிகமாக பாடல் கேட்கப் பயன்படும் ஸ்பாடிஃபை செயலியில் தற்போது ஊறும் பிளட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாடலை இதுவரை 8.96 கோடி முறை மக்கள் கேட்டுள்ளதாக ஸ்பாடிஃபை பதிவு செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் கூலி படத்தின் மோனிகா பாடல் 8.06 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது. ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் 6.56 கோடி முறை கேட்கப்பட்டு மூன்றாமிடத்தில் உள்ளது. சாய் அப்யங்கரின் தனிப்பாடலான சித்திர புத்திரி பாடல், 6.10 கோடி முறை கேட்கப்பட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட முதல் ஐந்து பாடல்களில், இரண்டு இடங்களை அறிமுக இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் பெற்றுள்ளார்.

சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி

இதையடுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுகுறித்த நெகிழ்ச்சியை சாய் அப்யங்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “2025-ல் என் பாடல்களுக்கு சிறப்பான அன்பை அளித்து, இந்த ஆண்டை மற்றொரு மறக்க முடியாத ஆண்டாக மாற்றியதற்கு நன்றி மக்களே! உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன், கடவுளின் அருளால், 2026-ஐ மேலும் பல அற்புதமான பாடல்களுடன் கொண்டாடுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

The song "Oorum Blood" from the movie Dude has topped the list of most-streamed songs on Spotify.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in