
பிக் பாஸ் 8 தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் வெளியேறிய சாச்சனா, மீண்டும் பிக் பாஸ் இல்லத்துக்குள் வந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
இம்முறை முதல் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்கிற ஒரு புது விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
எனவே, அதிகமான போட்டியாளர்கள் பரிந்துரை செய்ததன் காரணமாக, மகாராஜா படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனா, முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.
இதன் மூலம் பிக் பாஸ் வரலாற்றில், முதல் 24 மணி நேரத்தில் வெளியேறிய முதல் போட்டியாளர் ஆனார் சாச்சனா.
ஒரே ஒரு நாள் மட்டுமே பிக் பாஸ் இல்லத்தில் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் சாச்சனாவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதனால் சாச்சனாவை பிக் பாஸ் இல்லத்துக்குள் மீண்டும் அனுப்பவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்தன.
இந்நிலையில் பிக் பாஸ் இல்லத்துக்குள் மீண்டும் வந்துள்ளார் சாச்சனா. இந்நிகழ்ச்சியின் 6-வது நாளுக்கான விளம்பரத்தில் சாச்சனா பிக் பாஸ் இல்லத்துக்குள் வருவது உறுதியாகி உள்ளது.
சாச்சனாவை பார்த்தவுடன் மற்ற போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.