
செந்தூரபாண்டி படத்தில் நடித்ததற்காக விஜயகாந்த் பணம் வாங்க மறுத்ததாக இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மறைந்த விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் ஆகஸ்ட் 22 அன்று மீண்டும் வெளியிடப்படுகிறது. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது. விஜயகாந்தின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 அன்று வருகிறது. இதை முன்னிட்டு ஆகஸ்ட் 22 அன்று 4கே தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
அப்போது விஜயை வைத்து எடுத்த செந்தூரபாண்டி படத்தில் விஜயின் மூத்த சகோதரராக விஜயகாந்த் நடித்திருப்பார். இதில் நடித்ததற்காகப் பணம் பெற விஜயகாந்த் மறுத்ததை எஸ்.ஏ. சந்திரசேகர் நினைவுகூர்ந்து பேசினார்.
"விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு சரியாகப் போகவில்லை. ஆனால், நடிகராக வந்துவிட்டதால், அவரை நாம் எப்படியாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை செய்தபோது, விஜயைப் பெரிய நடிகருடன் நடிக்க வைப்போமே எனத் திட்டமிட்டேன். எந்தப் பெரிய நடிகரும் ஒத்துக்கொள்ளவில்லை. விஜயகாந்தை அழைத்துக் கேளுங்கள் என மனைவி கூறினார். நான் அலைபேசியில் அவரை அழைத்து வீட்டுக்கு வருகிறேன் என்றேன். அலைபேசியை வைத்துவிட்டு, நான் குளித்து முடித்து வருவதற்குள் என் வீட்டுப் படுக்கை அறையில் அமர்ந்திருந்தார் விஜயகாந்த். செந்தூரபாண்டி படப்பிடிப்புக்காக 15 நாள்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அடுத்த நாள் விஜயகாந்துக்கு ரூ. 1 லட்சத்தை முன்பணமாகக் கொடுக்கச் சென்றேன். இந்தப் படத்துக்கு நான் பணம் வாங்க மாட்டேன். உதவி என்று கேட்டதால், நான் படம் நடித்துக் கொடுக்கிறேன் என்றார். செந்தூரபாண்டி படம் மூலம் எனக்குப் பெரிய லாபம் கிடைத்தது. இதன் பிறகு கேட்டபோதும், விஜயகாந்த் பணம் வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டார். விஜயகாந்த் வீட்டுக்கு அருகிலுள்ள நிலம் என்னுடையது. விஜயகாந்த் பணம் வாங்க மாட்டேன் என்று கூறியதால், அந்த நிலத்தை விஜயகாந்த் பெயரில் பதிவு செய்துவிட்டு, நிலப் பத்திரத்தை அவரிடம் கொடுத்துவிட்டேன்" என்றார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
Vijayakanth | Actor Vijay | Vijay | Actor Vijayakanth | Captain Prabhakaran | Captain Prabhakaran Re-release | Sendhurapandi | SA Chandrasekar