ஆமிர் கானுடன் இணைந்து பாலிவுட்டில் வெற்றி பெற்ற தமிழ் இயக்குநர்!
2007-ல் தாரே ஸமீன் பர் படத்தை ஆமிர் கானே தயாரித்து நடித்து அமோல் குப்தாவுடன் இணைந்து இயக்கியும் இருந்தார். இந்தப் படம் நாடு முழுக்க பெரிய வெற்றியைப் பெற்றது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகமாக சித்தாரே ஸமீன் பர், கடந்த வாரம் வெளியானது. இதுவும் தற்போது பெரிய வெற்றியைப் பெற்று நாளுக்கு நாள் அதிக வசூலைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் பின்னணியில் ஆமிர் கானுடன் இருப்பவர் ஒரு தமிழர், இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா.
பிரசன்னா நடிப்பில் கல்யாண சமையல் சாதம் என்கிற படத்தை இயக்கினார் ஆர்.எஸ். பிரசன்னா. இப்படம் பேசிய துணிச்சலான கருத்துக்காகப் பாராட்டுகளைப் பெற்றது. இதே படம் ஷுப் மங்கல் சாவ்தான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இயக்கிய ஆர்.எஸ். பிரசன்னாவே இப்படத்தையும் இயக்கினார். இந்தப் படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல வசூலைப் பெற்றது. இடையில், சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஆர்எஸ் பிரசன்னா இயக்கியிருந்தார்.
அடுத்ததாக சித்தாரே ஸமீன் பர் படத்தில் ஆமிர் கானுடன் இணைந்தார் ஆர் எஸ் பிரசன்னா. ஆமிர் கான் தயாரித்து நடித்த இந்தப் படம் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களுடன் பாராட்டுகளுடன் ஆச்சர்யமான வெற்றியைப் பெற்றுள்ளது.
சித்தாரே ஸமீன் பர் முதல் 3 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 57.30 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளில் ரூ. 10.70 கோடியும் 2-வது நாளில் ரூ. 19.90 கோடியும் 3-வது நாளில் ரூ. 26.70 கோடியும் நிகர வசூலாகக் கிடைத்துள்ளது.
ஹிந்தியில் சமீபத்தில் ஷாருக் கானை இயக்கிய அட்லி பெரிய வெற்றியைக் கண்டிருந்தார். தற்போது ஆர் எஸ் பிரசன்னாவும் அமர்க்களமான வெற்றியைப் பெற்று தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.