பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்: நடிகை ரோஹிணி

பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரோஹிணி
ரோஹிணி
1 min read

பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேசினால் தீர்வு கிடைக்காது என்று நடிகை ரோஹிணி தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோஹிணி, “பெண்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். எந்த தொந்தரவு இருந்தாலும் நீங்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.

ரோஹிணி பேசியதாவது

“2019-ல் நடிகர் சங்க விசாகா கமிட்டி உருவாக்கப்பட்டது. பாலியல் தொல்லை ஏற்பட்டால் தைரியமாக இருங்கள். அதற்காக பயப்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் சொன்னால் தீர்வு கிடைக்காது அதனால் தான் அது குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என்று சொல்கிறோம். நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புகாரளிக்க முன்வாருங்கள். பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். எந்த தொந்தரவு இருந்தாலும் நீங்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in