ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகியப் படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய ஆர். ஜே. பாலாஜி, சூர்யாவின் 45-வது படத்தை இயக்கவுள்ளதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
சாய் வித் சித்ரா யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது:
“சூர்யாவிடம் கதையைச் சொல்லிவிட்டு காத்திருக்கும் எவ்வளவோ இயக்குநர்களை எனக்கு தெரியும். பல்வேறு காரணங்களால் அந்தக் கதைகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன.
ஆனால், ஆர். ஜே. பாலாஜி சூர்யாவிடம் கதையைச் சொன்ன உடனே, சூர்யாவுக்கு அக்கதை பிடித்ததாகவும், வருகிற நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் பாலாஜி ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார். ஒரு மணி நேரம் கதையை கேட்ட பிறகு ரஹ்மானுக்கும் அது பிடித்திருக்கிறது. படத்தில் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே பணியாற்றுவார், சம்பளம் கிடைக்கும் என்பதால் அனைத்து படங்களிலும் பணியாற்ற மாட்டார்.
சூர்யாவுடனான படம் குறித்து என்னிடம் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடின உழைப்பால் ஒருவர் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு ஆர்.ஜே. பாலாஜி ஒரு சிறந்த உதாரணம்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் வருகிற நவம்பரில் சூர்யாவின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.