தென்னிந்திய அடையாளத்தால் பாலிவுட் வாய்ப்புகளை இழந்தேன்: ரெஜினா கசாண்ட்ரா கவலை | Regena Cassandrra |

தென்னிந்தியாவில் இருந்து வந்தவர் என்பதால் என்னைச் சிறுமைப்படுத்தினார்கள்....
தென்னிந்திய அடையாளத்தால் பாலிவுட் வாய்ப்புகளை இழந்தேன்: ரெஜினா கசாண்ட்ரா கவலை
தென்னிந்திய அடையாளத்தால் பாலிவுட் வாய்ப்புகளை இழந்தேன்: ரெஜினா கசாண்ட்ரா கவலைhttps://x.com/ReginaCassandra
1 min read

தென்னிந்திய நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டதால் தனக்கு அதிகமான பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நடிகை ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ல் தமிழில் வெளியான ’கண்ட நாள் முதல்’ படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் ரெஜினா கசாண்ட்ரா

கடந்த 2019-ல் ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ரெஜினா கசாண்ட்ரா. அதனைத் தொடர்ந்து ‘ராக்கெட் பாய்ஸ்’ ‘ஃபர்ஸி’ போன்ற இணையத் தொடர்களிலும், அக்‌ஷய் குமாருடன் ‘கேசரி சாப்டர் 2’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் 2 படங்களைக் கைவசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்து வருவதாகத் தெரிய வருகிறது.

தென்னிந்திய அடையாளத்தால் புறக்கணிப்பு

இதற்கிடையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டியில், பாலிவுட்டில் தனக்குக் குறைவான பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு தனது ‘தென்னிந்திய அடையாளம்’ ஒரு முக்கியக் காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். வட இந்தியத் திரையுலகில் ஒரு தென்னிந்திய நடிகையாகத் தன்னை அடையாளப்படுத்திய விதம், தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

என்னைச் சிறுமைப் படுத்தினார்கள்

இதுகுறித்து அவர் பேசியபோது கூறியதாவது:-

“நான் ஒரு தென்னிந்திய நடிகை. பெரும்பாலான தென்னிந்தியர்களுடன் ஒப்பிடும்போது, ​​எனக்கு நன்றாகவே இந்தி படிக்க, எழுத, பேச தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு எனது சொந்தக் குரலிலேயே பேசியிருக்கிறேன். கூடுமானவரை அந்தக் கதாப்பாத்திரங்களாகவே வாழ முயன்றிருக்கிறேன். ஆனால், தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள்.

வீடும் இதயமும் தென்னிந்திய சினிமா

என்னை மிகவும் இழிவான முறையில் நடத்தினார்கள். அது வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, அவர்களின் செயல்களிலும் தெரிந்தது. திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினார்கள். இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள். ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள். மும்பையில் பணியாற்றினாலும் எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளன" என்று கூறியுள்ளார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.

Summary

Actress Regina Cassandra has said that she did not get Bollywood opportunities because she was identified as a South Indian actress.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in