லால் சலாம் படத்தின் காணாமல் போன காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவற்றை இணைத்து ஒடிடியில் படம் வெளியிடப்படும் எனத் தகவல் தெரிவித்துள்ளார் லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9-ல் வெளியானது. கிரிக்கெட்டை மையமாக வைத்து, இரு கிராமங்களுக்கு இடையே நிலவும் மதப் பிரச்னை குறித்துப் பேசியிருந்தது 'லால் சலாம்’ திரைப்படம்.
ஆனால் திரைப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து, வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. திரைப்படம் வெளியான சில நாட்கள் கழித்து இது தொடர்பாகப் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் திரைப்படத்தின் 21 நாட்கள் ஃபுட்டேஜ் காணாமல் போனதாகவும், அந்த ஃபுட்டேஜின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போகாமல் இருந்திருந்தால், நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருப்போம் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும் இன்னும் லால் சலாம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், `லால் சலாம் படத்தின் Extended Director’s Cut விரைவில் ஒடிடியில் வெளிவர உள்ளது. இது திரையரங்கப் பதிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
நாங்கள் இழந்த படக்காட்சிகளை மீட்டு இந்தப் பதிப்பில் இணைத்துள்ளோம். நான் எழுதியபடியே இந்தப் பதிப்பு இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். இந்தப் பதிப்புக்கான புதிய இசையை ஏ.ஆர். ரஹ்மான் பதிவு செய்ய விரும்பினார். இதற்காக அவர் கூடுதல் ஊதியம் வாங்கவில்லை’ என்றார்.