
நடிகர் ரவி மோகன் தனது பங்களா வீட்டுக்கு 11 மாதங்களாக கடன் தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகனுக்குச் சொந்தமாகச் சொகுசு பங்களா வீடு ஒன்று உள்ளது. தனது முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் அதை அவர் வாங்கியதாகவும், அங்குதான் இருவரும் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சொகுசு பங்களா, வங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ரவி மோகன் அறிவித்த பின்னர் அவர் அந்த வீட்டிற்குச் செல்வதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சமீபத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் தொடங்கினார். அதன் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவருக்குச் சொந்தமான சொகுசு பங்களாவுக்கு வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
ரவி மோகன் அந்த சொகுசு பங்களாவுக்குக் கடந்த 11 மாதங்களாகக் கடன் தவணை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன் மொத்தத் தொகை ரூ. 7.60 கோடி என்று தெரிய வருகிறது. இதையடுத்து வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையை வங்கி நிர்வாகம் மேற்கொண்டது. அதற்காக அவரது வீட்டில் ஜப்தி நோட்டீஸை வங்கி அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். ரவி மோகன் விரைவில் கடன் பாக்கியைச் செலுத்தாவிடில் பங்களா வங்கியின் வசம் சென்றுவிடும் என்றும் தெரிய வருகிறது.