விஷால் நடித்த ‘ரத்னம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தை வெளியிட விடாமல் ஒருசிலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ரத்னம்’படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தை வெளியிட விடாமல் ஒருசிலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து விஷால் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த ஆடியோவை திரையரங்கு உரிமயாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது: “ரத்னம் படத்திற்கான விநியோகத் தொகை பாக்கியைத் தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகும் என திருச்சி தஞ்சாவூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்தது. அந்த தொகையை செலுத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது குறித்து பேச சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அழைத்தால், யாரும் பதிலளிப்பதில்லை.
நான் எத்தனையோ படங்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன், படம் வெளியாக உதவியிருக்கிறேன். இன்றைய சூழலில் ஒரு படம் திரையரங்கிற்கு வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. திரையரங்கிற்கு வந்தாலும், அது வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.
இப்படிப் பல சிக்கல்கள் இருக்கின்ற இந்த நேரத்தில் படத்தை வெளியிடவிடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்கின்றனர். எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும். இது குறித்துச் சம்பந்தப்பட்ட பகுதியின் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். இந்த பிரச்னையை நான் சும்மா விடப்போவதில்லை” என்றார்.