என் மீது அன்பு வைக்க நிறைய பேர் இருக்கும் நிலையில் எதைக் கண்டும் பயப்பட மாட்டேன் என்று பா. இரஞ்சித் பேசியுள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் தங்கலான்.
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாராபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் பேசிய இரஞ்சித், “என் மீது அன்பு வைக்க நிறைய பேர் இருப்பதால் எதைக் கண்டும் பயப்பட மாட்டேன். சில நேரங்களில் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். வன்மத்துக்கு பதில் சொல்லும் இடத்தில் இருந்தால், நாம் காலி ஆகிடுவோம். எனவே அதை விட அதிகமாக அன்பை கொடுக்க நிறைய பேர் இருக்கும் நிலையில், நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன், வேறு பாதையை நோக்கியும் போகமாட்டேன்.
ஒரு இயக்குநருக்கு ஏன் இவ்வளவு பாசத்தை கொடுக்கனும்? இவ்வளவு ஆதரவு கொடுக்கனும்? போன்ற கேள்விகள் எழுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, படம் வெளியாகாத ஒரு சில வட மாநிலங்களையும் எனக்கு ஆதரவு கிடைக்க என்னுடைய கருத்தும், நான் பார்க்கும் வேலையும் தான் காரணம். நமது வேலை பிடிக்கவில்லை என்றால் இந்நேரம் தூக்கிப் போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், என் சிந்தனை, கருத்து, அன்பு என்று இவை அனைத்தையும் சரியாகப் புரிந்துக்கொள்ளும் பலரும் இருப்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை என்பது தான் இந்த தங்கலான் வெற்றி மூலம் நான் புரிந்துக்கொண்டேன்” என்றார்.