பரியேறும் பெருமாள் தான் நல்ல படம் என்றால் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மோசமான படங்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் பா. இரஞ்சித்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முன்னதாக நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இரஞ்சித், “மாரி செல்வராஜ் மீது ஒரு விமர்சனம் உள்ளது. தன்னுடைய வலியை அவர் பதிவு செய்யும்போது அதனை வரவேற்கும் கூட்டம், கர்ணன் ஆக நின்று சண்டை செய்யும்போது கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
நாங்கள் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பீர்களா?
ஒரு படைப்பாளன் மீது மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்துகிறீர்கள். பரியேறும் பெருமாள் தான் நல்ல படம் என்றால் கர்ணன் மாமன்னன் ஆகிய படங்கள் மோசமான படங்களா?
கர்ணன் ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை, ஏனென்றால் அவர் திருப்பி அடிக்கிறார். நாங்கள் திருப்பி அடித்தால் பிடிக்காதா?
ஏன் ஒருவர் குரலை உயர்த்துகிறார், என்ன பிரச்னை நடந்துக் கொண்டிருக்கிறது, ஏன் இந்தச் சூழலை சமூகம் அவனுக்கு உருவாக்கி கொடுத்துள்ளது? போன்ற கேள்விகளை எல்லாம் எப்போது உங்களிடம் கேட்கப்போகிறீர்கள்.
இந்த கேள்விக்கான பதிலை தேடாமல், உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் படங்களை மட்டும் தான் எடுக்க வேண்டுமா?
இவை அனைத்தையும் உடைத்துதான் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். தற்போது வாழை படத்தையும் அவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இயக்கியுள்ளார்” என்றார்.
இந்நிலையில் இரஞ்சித்தின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரஞ்சித் சொன்னக் காரணத்திற்காக கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை எனத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.