ரஜினியின் வேட்டையன் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
த.செ. ஞானவேல் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். லைகா தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ கடந்த 9 அன்று வெளியானது. பாடல் வெளியானது முதல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது மிகப் பெரிய அளவில் கலக்கி வருகிறது. மலேசியா வாசுதேவன் குரல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டது பாடலின் சிறப்பம்சம்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூலி படப்பிடிப்பில் இந்தப் பாடலுக்கு ரஜினி நடனமாடியது கூடுதல் கவனம் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 20 மாலை 6 மணி முதல் இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வேட்டையன் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10-ல் வெளியாகிறது.