அப்போலோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த், அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த், செப் 30 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டதாகவும், வீக்கத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், ரஜினி இரு நாள்களில் வீடு திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், நேற்றிரவு (அக். 3) 11 மணிக்கு வீடு திரும்பினார்.
இந்நிலையில் தன்னை வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.
ரஜினி குறிப்பிட்டுள்ளதாவது
“நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.