
அமரன் படம் தனிப்பட்ட முறையில் தன் மனதுக்கு நெருக்கமாக அமைந்துள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படம் அக்.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஜினி பேசியதாவது
“அமரன் படத்தை நேற்று பார்த்தேன். இப்படத்தை தயாரித்த கமலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. ராணுவம் தொடர்பாக நிறையப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கம் மிகவும் அருமையாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் தங்களின் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடித்ததிலேயே சிறந்தப் படம் என்றும் கூறலாம். சாய் பல்லவியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. படம் முடிந்த பிறகு என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. என்னுடைய 2-வது அண்ணனும் ராணுவத்தில் பணியாற்றியதால் இப்படம் தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்.
ராணுவ வீரர்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் என்ன ஆகும், அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் என அனைத்தையும் அனைவரும் உணரவேண்டும். முகுந்த் அவர்களுக்கு சல்யூட்”.
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.