
கமல் ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் கடந்த வியாழக்கிழமை வெளியானது தக் லைஃப். இந்தப் படத்தில் மிகச் சிறிய வேடமாக நாசரின் மகள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர், நடிகர் ரகுமானின் மகள் - அலிஷா.
இவர் வெறும் நடிகை மட்டுமல்ல, தக் லைஃப் படத்தில் மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்துள்ளார் அலிஷா.
தக் லைஃப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த அலிஷா, புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
அலிஷாவுக்கு நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம். நடிகையாக வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்துள்ளது. கேமரா முன்பு நடிக்கத் தொடங்குவதற்கு முன் சினிமா பற்றிய நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது நல்லது என்பதை உணர்ந்து, கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இரு குறும்படங்களை எடுத்துள்ளார்.
மலையாளத்தில் வரும் படங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள அலிஷா, மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாக வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்துள்ளது.
நடிகர் ரகுமான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவிகள் சகோதரிகள் என்பது அனைவரும் அறிந்தது. எனவே, ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவும் அலிஷாவுக்கு உள்ளது. இசையிலும் ஆர்வம் உள்ள அலிஷாவை ஏ.ஆர். ரஹ்மான் எப்போது பார்த்தாலும் பாடலைப் பாடிக் காண்பிக்கச் சொல்வார் என முன்பொரு பேட்டியில் அலிஷா தெரிவித்துள்ளார். தக் லைஃப் அனுபவங்களைப் பகிர்ந்துள்ள அலிஷாவின் பதிவின் கீழ் ஏ.ஆர். ரஹ்மானும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.