
ஏ.ஆர். ரஹ்மான் மீது அவதூறு பரப்ப வேண்டாம், அவர் அற்புதமான மனிதர் என குரல் பதிவு வாயிலாக, தங்கள் விவாகரத்து செய்தி குறித்தும், அது தொடர்பாக பரப்பப்படும் அவதூறு குறித்தும் விளக்கமளித்துள்ளார் சாய்ரா ரஹ்மான்.
சாய்ரா ரஹ்மான் வெளியிட்ட குரல் பதிவில் அவர் பேசியவை பின்வருமாறு,
`சாய்ரா ரஹ்மான் பேசுகிறேன். தற்போது நான் மும்பையில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்று இருக்கிறேன். அதனால்தான் ரஹ்மானிடம் இருந்து விலகி இருக்க நான் முடிவுசெய்தேன். தயவு செய்து ரஹ்மான் குறித்து அவதூறு பரப்பவேண்டாம் என அனைத்து யூடியூபர்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் நான் கோரிக்கை விடுக்கிறேன்.
அவர் குறித்து தவறாக எதுவும் கூறவேண்டாம். அவர் அற்புதமான மனிதர். உலகின் மிகச் சிறப்பான மனிதர். எனது உடல் நலக்கோளாரால்தான் நான் தற்போது சென்னையில் இல்லை. நான் சென்னையில் இல்லாமல்போனால் சாய்ரா எங்கே சென்றார் என நீங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் மும்பையில் சிகிச்சை எடுத்துவருகிறேன்.
அவரையும், எனது குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்யவிரும்பவில்லை. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே இருக்கவேண்டும். என் வாழ்நாள் முழுவதும் அவரை நான் நம்புவேன். அந்த அளவு அவரை காதலிக்கிறேன். அவர் மீது சுமத்தப்படும் அனைத்துவித தவறான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த நேரத்தில் நாங்கள் தனிமையில் இருக்கவும், எங்களுக்குத் தகுந்த இடைவெளி கிடைக்கவும் கடவுளிடம் பிராத்திக்கிறேன். அதிகாரபூர்வமாக நான் இன்னும் எதையும் அறிவிக்கவில்லை. என் சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னைக்குத் திரும்புவேன். அவரது பெயரைக் கெடுப்பதை நிறுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நான் ஏற்கனவே கூறியதைப் போல அவர் ஓர் அற்புதமான மனிதர்’ என்றார்.