படப்பிடிப்பு தளங்களில் உள்ள கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக நடிகை ராதிகா குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் காவல் துறையினர் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீதும், நடிகர் ஜெயசூர்யா மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் மலையாளத் திரையுலகில் நடந்த ஒரு வித்தியாசமான அனுபவம் குறித்து ராதிகா சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “நான் இந்த துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்யும் பலரை நான் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற சூழலில் பெண்கள் ‘முடியாது’ என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
படப்பிடிப்பின் போது நடிகைகள் இருக்கக்கூடிய அறைகளின் கதவுகளை பலர் தட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற சூழலில் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்கள்.
அதேபோல் படப்பிடிப்பின் போது வழங்கப்படும் கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடை மாற்றும் வீடியோக்களை பதிவு செய்து தங்களின் செல்போனில் பார்ப்பார்கள்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று நான் குரல் கொடுத்தேன். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நான் ஹோட்டலில் அறை எடுத்துக்கொள்வேன்” என்று ராதிகா பேசியுள்ளார்.