புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் நிறைய வசூல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என ஏஜிஎஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்பட பலரும் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.
‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் வேலைகள் நிறைவடையாததால் டிசம்பர் 6 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக ‘புஷ்பா 2’ படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டு, டிசம்பர் 5 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் ஏஜிஎஸ் நிர்வாகி ஒருவர் பேசுகையில், “புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் நிறைய வசூல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. விஜய், அஜித் மற்றும் ரஜினியை தவிர வேறு எந்த நடிகரின் படமும் முதல் நாளில் இரட்டை இலக்க எண்களில் வசூல் செய்ததில்லை. ஆனால், புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் நிச்சயமாக இதனை செய்யும் என நம்புகிறோம்.
சமீபத்தில், கோட் படத்தை தமிழ்நாடு முழுவதும் 806 திரையரங்குகளில் வெளியிட்டோம். அதேபோல் புஷ்பா 2 படத்தையும் வெளியிடுவோம். எனவே இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். பாகுபலி 2 படத்தின் தமிழ்நாடு பங்கு ரூ. 80 கோடியை நெருங்கியது. புஷ்பா 2 படமும் அதேபோல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.