பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி காலமானார்: திரையுலகினர் அஞ்சலி | R.B. Choudary |

விஜய் நடித்த பூவே உனக்காக உள்ளிட்ட பல ஹிட் படங்களைத் தயாரித்தவர்...
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
1 min read

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரும் 'சூப்பர் குட் பிலிம்ஸ்'-ன் நிறுவனருமான ஆர்.பி.சௌத்ரி, தனது 79-வது வயதில் சாலை விபத்தில் காலமானார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர்தான் இவருக்குச் சொந்த ஊர். அங்கு நடந்த ஒரு திருமணச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது அவருக்கு விபத்து நேர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1988 முதல் திரையுலகில் இயங்கி வந்த ஆர்.பி.சௌத்ரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். குறிப்பாக புது வசந்தம், நாட்டாமை, சூர்யவம்சம், பூவே உனக்காக, ஆனந்தம், திருப்பாச்சி, ஜில்லா போன்ற ஹிட்டுகளைக் கொடுத்தவர். கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன், எழில், சசி மற்றும் லிங்குசாமி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர்.

பிரபல நடிகர்கள் ஜீவா மற்றும் ஜிதன் ரமேஷ் இருவரும் இவரது மகன்கள்தான்.

விஜயின் திரைப்பயணத்தில் பூவே உனக்காக படம் மூலம் முக்கிய திருப்பத்தைக் கொடுத்தவர் ஆர்.பி. சௌத்ரி. அடுத்தடுத்து அவருக்கு லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஷாஜகான், ஜில்லா வரையிலான படங்களைத் தயாரித்தவர். தெலுங்கிலும் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ஹிட்டான சுஸ்வாகதம், சிரஞ்சீவிக்கு காட்பாதர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் வரலாறு முக்கியம், மாரீசன் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதுவரை, 99 படங்களைத் தயாரித்திருந்த ஆர்.பி. சௌத்ரி, தனது 100-வது படத்தை விஜயை வைத்து உருவாக்கும் திட்டத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது.

Summary

R.B. Choudary, a leading producer in the South Indian film industry and founder of 'Super Good Films', passed away in a road accident at the age of 79.

logo
Kizhakku News
kizhakkunews.in