
தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த சமையத்தில், தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து பிரியாமணி மனம் திறந்துள்ளார்.
நடிகை பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தஃபாவுக்கும் கடந்த 2017-ல் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மதம் கடந்து திருமணம் செய்துகொண்டதால் பிரியாமணிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சமீபத்தில் ஃபிலில் ஃபேருக்கு அளித்த பேட்டியில் பிரியாமணி தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
பிரியாமணி பேசியதாவது
“எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தவுடன் நிறைய விமர்சனங்களை சந்தித்தேன். அவர் ஒரு முஸ்லிம், உங்களின் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள். எனக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது.
ஒரு ஜோடியை மட்டும் இப்படி குறிவைப்பது ஏன்? ஜாதி அல்லது மதத்தை கடந்து பல பெரிய நடிகர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஏனென்றால், அவர்கள் மதங்களை கடந்து ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஆனால் அதற்காக ஏன் இப்படி ஒருவர் மீது வெறுப்பை காண்பிக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.
ரமலான் பண்டிகையின்போது நான் வாழ்த்து தெரிவித்ததற்கு நான் மதம் மாறிவிட்டதாக விமர்சித்தனர். நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அது என் தனிப்பட்ட முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்துக்கு முன்பே முஸ்தஃபாவிடம் தெரிவித்தேன். அவரின் பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். நான் ஹிந்து மதத்தில் பிறந்தேன். எனவே, எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நான் என் கணவரின் மதத்தை மதிக்கிறேன். அவரும் எனது மதத்தை மதிக்கிறார்.
சமீபத்தில் நவராத்திரிக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ஒருசிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு எப்படி பதிலளிப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அதனால் பாதிக்கப்படவில்லை. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.