கோட் படத்தில் யாரும் எதிர்பாராத நிறைய ஆச்சரியங்கள் உள்ளதாக நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக நடிகர் பிரேம்ஜி பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது
“கோட் படத்தில் நீங்கள் எதிர்பாராத நிறைய ஆச்சரியங்கள் உள்ளது. முதல் காட்சி மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இதுபோன்ற ஆச்சரியங்களை தமிழ் சினிமாவில் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. படம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே பயங்கரமான ஒரு விஷயம் உள்ளது. அதைப் பற்றி நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. திரையரங்கில் அமர்ந்து 1000 நபர்களுடன் பார்க்கும் போது உங்களை அறியாமல் ஒரு உத்வேகம் வரும். தோனி நடந்து வந்தால் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு உத்வேகம் இருக்குமோ அதேபோல விஜயை பார்க்கும்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் சேர்ந்து மிகவும் பயங்கரமான ஒரு சத்தத்தை எழுப்புவார்கள். அந்த தருணத்தைப் பார்க்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு 2-3 நிமிடங்களுக்கும் கைத்தட்டல்கள் இருந்துக்கொண்டே இருக்கும். 2024-ல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக கோட் அமையும்” என்றார்.
முன்னதாக கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில், “ஒரு படத்துக்கு அதிகமான ஹைப் இருப்பது நல்லதல்ல. அது, ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு படம் பார்க்க வருவது போன்ற விஷயம். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வருவார்கள். ஒரு இயக்குநரால் அவரது எண்ணங்களை வைத்து மட்டுமே படம் எடுக்க முடியும், ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது. எனவே அதிகமான ஹைப் இருப்பது நல்லதல்ல. அதனால் தான் கோட் படத்துக்கு குறைந்த அப்டேட்களைக் கொடுக்கிறோம்” என்றார்.
இந்நிலையில் ஒரு படத்துக்கு அதிகமான ஹைப் இருப்பது நல்லதல்ல என்று தயாரிப்பாளர் தெரிவித்த நிலையில் கோட் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பிரேம்ஜி பேசியது பேசுப்பொருளாக மாறியுள்ளது.