திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு திரைத் துறையினர் சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
1975-ல் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் திரைத் துறையில் புகழின் உச்சத்தில் உள்ளார். இந்த வயதிலும் இவருடைய கூலி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
1975 ஆகஸ்டில் அபூர்வ ராகங்கள் வெளியானது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆகஸ்டில் தற்போது கூலி வெளியாகிறது. இதன்மூலம், திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் ரஜினிகாந்த்.
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்குத் திரைத் துறையினர் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும்.
கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழாவை விமர்சையாக கொண்டாடி இருப்பார். கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.
திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து, சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
Rajinikanth | Rajini 50 Years | Vijayakanth | Vijayakant | Premallatha Vijayakant |DMDK | Tamil Film Industry | Tamil Film |