லப்பர் பந்து படத்தில் விஜயகாந்தை கொண்டாடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்பட பலர் நடிப்பில் கடந்த செப். 20 அன்று வெளியான படம் ‘லப்பர் பந்து’.
இப்படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ் என்கிற கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது
“படத்தின் பாடல்கள், வண்டியில் ஸ்டிக்கர் என ஒவ்வொரு காட்சியிலும் விஜயகாந்தின் தாக்கம் இருந்தது. தேமுதிகவின் தொண்டர்கள் எப்படி விஜயகாந்தை கொண்டாடுவார்களோ, அதேபோல் இப்படம் அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
‘நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்’ என்கிற பாடலை பெரும்பாலும் நாங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்துவோம். இப்படத்தில் சரியான இடத்தில் அப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் பயன்படுத்த முறையான அனுமதி பெறப்பட்டது. ஆனால், லப்பர் பந்து படத்தில் விஜயகாந்தை நேரடியாக காட்டவில்லை. விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. எனவே அவரை அனைவரும் கொண்டாடுகிறார்கள். எனவே அவரை கொண்டாடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.