தலைக்கவசம் அணியாததற்கு தனக்கு அபராதம் விதித்ததன் மூலம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக நடிகர் பிரசாந்த் பேசியுள்ளார்.
பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய பிரசாந்த், கொஞ்சம் வித்தியாசமான முறையில் புல்லட் வாகனத்தை ஓட்டியபடி பேட்டி அளித்தார்.
ஆனால், தலைக்கவசம் அணியாமல் பேசியிருந்தார். கேள்வி கேட்டவரும் தலைக்கவசம் அணியவில்லை.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் விதியை மீறியதாகக் கூறி பலரும் விமர்சித்தனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்த நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை தலைக்கவசம் அணியாமல் சென்ற பிரசாந்துக்கு ரூ. 2000 அபராதம் விதித்தது.
இந்நிலையில் அந்தகன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்திடம் தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு முழுவதும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். நிறைய இடங்களுக்குச் சென்று இலவசமாக தலைக்கவசங்களை வழங்குகிறேன். தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியம், அதனால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
தற்போது எனக்கு அபராதம் விதித்ததன் மூலம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், நீங்கள் இதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? என்ற கேட்டதற்கு, “இதுபோன்று வேறு யாரிடமும் நீங்கள் கேட்க முடியுமா? எனவே அந்த நிகழ்வு மூலம் இந்த விழிப்புணர்வு பலருக்கும் போய் சேரும்” என்ற பதிலளித்தார்.