பிரதீப் ரங்கநாதன் - அஷ்வத் மாரிமுத்து - ஏஜிஎஸ் நிறுவனம் கூட்டணியில் கடந்த வெள்ளியன்று வெளியான டிராகன் படம் ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.
2கே கிட்ஸ், 90 கிட்ஸ், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக டிராகன் இருப்பதால் திரையரங்குகள் திருவிழாக் கோலமாகக் காட்சியளிக்கின்றன. திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக, இயக்குநர் ஷங்கரிடமிருந்தும் படக் குழு பாராட்டைப் பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் அட்டகாசமான ஒரு என்டர்டெயினர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் கடைசி 20 நிமிடங்கள் கண்கலங்கச் செய்ததாகவும் பாராட்டித் தள்ளியுள்ளார் ஷங்கர்.
இந்நிலையில், டிராகன் படம் முதல் 3 நாள்களில் உலகளவில் 50.22 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் மூன்று நாள்களில் தமிழ்நாட்டில் ரூ. 24.9 கோடியையும் ஆந்திரம், தெலங்கானாவில் ரூ. 6.25 கோடியையும் கேரளம், கர்நாடகம், வட இந்தியாவில் ரூ. 4.37 கோடியையும் இந்தியாவுக்கு வெளியே உலகளவில் ரூ. 14.7 கோடியையும் டிராகன் படம் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கதற கதற பிளாக்பஸ்டர் என்று படத்தின் வெற்றியைக் குறிப்பிட்டுள்ளது ஏஜிஎஸ்.
இதையடுத்து டிராகன் படம் விரைவில் ரூ. 100 கோடி வசூலை எட்டி பிரதீப் ரங்கநாதனின் ஹாட்ரிக் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.