
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சென்னையில் கடந்த இரு நாள்களாக போதைப்பொருள் தொடர்புடைய வழக்கும் பெரியளவில் பேசுபொருளாக உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் நடைபெற்ற சண்டை தொடர்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில் போதைப்பொருள் குறித்த கோணம் திறந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக போதைப்பொருளை விநியோகித்ததாக பிரதீப் குமார் மற்றும் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடமிருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் விசாரணை வளையத்துக்குள் வந்தார். பிரசாத்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதைப்பொருளை வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதே வழக்கு விசாரணையின் அடிப்படையில் மற்றொரு பிரபல தமிழ் நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளார்கள்.
நடிகர் கிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர்.