
பவன் கல்யாணின் ’ஓஜி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 154 கோடி என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண், இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் நேற்று (செப். 25) வெளியானது. இயக்குநர் சுஜீத் ஏற்கெனவே சாகோ, ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கியுள்ளதால், இப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் ‘ஓஜி’ படம் உலகளவில் முதல் நாளில் ரூ.154 கோடி வசூலைக் குவித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சமீபத்தில் வெளிவந்த அனிமல் (ரூ. 116 கோடி), ஜவான் (ரூ. 128 கோடி), லியோ (ரூ. 143 கோடி), கூலி (ரூ. 153 கோடி) படங்களின் முதல் நாள் வசூலையும் பவன் கல்யாணின் ஓஜி தாண்டி சாதனை படைத்துள்ளது. எனினும் முதல் நாளில் நம்பமுடியாத வசூலை ஈட்டிய புஷ்பா 2 (ரூ. 274 கோடி), ஆர்ஆர்ஆர் (ரூ. 223 கோடி), பாகுபலி 2 (ரூ. 215 கோடி), கேஜிஎஃப் 2 (ரூ. 159 கோடி), சலார் (ரூ. 158 கோடி) படங்களை ஓஜியால் தாண்ட முடியவில்லை.