'லட்டு பாவங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட காணொளியை நீக்கியதற்கான விளக்கத்தை அளித்துள்ளது பரிதாபங்கள் குழு.
ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி கோயிலில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இதன்பிறகு, ஆய்வு முடிவில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை ஆந்திர அரசு அமைத்தது.
இந்நிலையில் லட்டு விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் குழு தங்களின் வழக்கமான பாணியில் 'லட்டு பாவங்கள்' என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டனர்.
அந்த காணொளி வெளியான சில மணி நேரத்தில் அதிகமானப் பார்வைகளை பெற்றது. ஒரு சில கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இதைத் தொடர்ந்து பரிதாபங்கள் குழு அந்த காணொளியை நீக்கியது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது பரிதாபங்கள் குழு.
இது குறித்த அறிக்கையில், “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.