பராசக்தி படத்தில் அண்ணாதுரை வசனம் நீக்கம்: வெளியான தணிக்கை பட்டியல் | Parasakthi |

ஜனநாயகன் படம் வெளியீடு தள்ளிப்போவதால் கூடுதல் திரையரங்குகளில் பராசக்தி...
பராசக்தி படத்தில் அண்ணாதுரை வசனம் நீக்கம்: வெளியான தணிக்கை பட்டியல்
பராசக்தி படத்தில் அண்ணாதுரை வசனம் நீக்கம்: வெளியான தணிக்கை பட்டியல்
2 min read

பராசக்தி படம் திட்டமிட்டபடி ஜனவரி 10 அன்று வெளியாகவுள்ள நிலையில், அப்படத்திற்குத் தணிக்கை வாரியம் பரிந்துரைத்த மாற்றங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நாளை (ஜன. 10) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தணிக்கை சான்றிதழ் சிக்கல்

ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கெனவே விஜயின் ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, வெளியீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பராசக்தி படமும் அறிவிக்கப்பட்ட நாளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இதற்கிடையில் இன்று இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டபோது பலமுறை ஆய்வுகளுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டது. மேலும் சர்ச்சைக்குரிய 25-க்கும் மேற்பட்ட காட்சிகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், படத்தில் மாற்றங்கள் செய்யப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

பராசக்தி படத்தில் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள்

  • அண்ணாதுரையின் புத்தகத் தலைப்பான “தீ பரவட்டும்” என்ற வாசகம் "நீதி பரவட்டும்" என்று மாற்றப்பட்டுள்ளது.

  • “இந்தி என் கனவை அழித்தது” என்ற வசனம், ”என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது” என்று மாற்றப்பட்டுள்ளது.

  • ”அரக்கி” என்ற சொல், “இந்தி அரக்கி” என்று மாற்றப்பட்டுள்ளது.

  • “எங்களை நீக்கிவிட்டு” என்று தொடங்கி “இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்று வரும் அண்ணாதுரையின் புகழ்பெற்ற பேச்சு நீக்கப்பட்டுள்ளது.

  • தேசியத்திற்கு எதிராக வரும் வசனம் மற்றும் எழுத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

  • மற்ற நாடுகளில் மொழித்திணிப்பு ஏற்பட்ட வரலாற்றைப் பேசும் பகுதிகளின் பின்னணி வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

  • “வற சப்பாத்தி, இந்தி கத்துக்கிட்டு” என்பது உள்ளிட்ட சில சொற்கள் மற்றும் தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ள இடங்கள் மௌனமாக்கப்பட்டுள்ளன.

  • அஞ்சல் நிலையத்தின் பலகையில் மாட்டு சாணத்தைப் பூசுவதாக அமைக்கப்பட்ட காட்சி அகற்றப்பட்டுள்ளது.

  • உருவ பொம்மை எரிப்புக் காட்சிகள், அஞ்சலகம் மீது சாணத்தை வீசும் காட்சி, இளம் தாய் கொலை, இறந்த உடல்களைக் காட்டும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், படத்தில், 52 இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் மௌனமாக்கப்பட்டுள்ளது தணிக்கைச் சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. தணிக்கை வாரியத்தால் வெட்டப்பட்டது போக, 162:43 நிமிடங்களுடன் பராசக்தி நாளை (ஜன. 10) வெளியாகிறது. அதாவது 2 மணி நேரம் 30 நிமிடம் அல்லது 45 நிமிடங்கள் வரை படம் திரையிடப்படும்.

முன்பதிவு தொடக்கம்

இதையடுத்து பராசக்தி படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. ஜனநாயகன் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் பராசக்தி படம் கூடுதல் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Parasakthi is set to be released on January 10 as scheduled, and in the meantime, a list of changes recommended by the Censor Board for the film has been released.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in