பராசக்திக்குக் கிடைத்தது தணிக்கை சான்றிதழ்: திட்டமிட்டபடி ஜன.10 வெளியீடு | Parasakthi |

தணிக்கையில் பலமுறை காட்சிகள் நீக்கப்பட்டு, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்...
பராசக்திக்குக் கிடைத்தது தணிக்கை சான்றிதழ்: திட்டமிட்டபடி ஜன.10 வெளியீடு
பராசக்திக்குக் கிடைத்தது தணிக்கை சான்றிதழ்: திட்டமிட்டபடி ஜன.10 வெளியீடு
1 min read

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நாளை (ஜன. 10) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தணிக்கை சான்றிதழ் சிக்கல்

ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கெனவே விஜயின் ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, வெளியீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பராசக்தி படமும் அறிவிக்கப்பட்ட நாளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. முன்னதாக, இப்படம் தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட போது பலமுறை காட்சிகள் நீக்கப்பட்டு, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சான்றுகள் கேட்ட தணிக்கை குழு

தணிக்கையின்போது படத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், இந்தி திணிப்பு போராட்டக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் சில காட்சிகளுக்கு அடிப்படையாக அமைந்த வரலாற்றுத் தரவுகளைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று படக்குழுவிடம் தணிக்கை வாரியம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், வெளியீட்டுத் தேதி நெருங்கிய நிலையில், அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

இந்நிலையில், நாளை படம் வெளியாகவுள்ளதை அடுத்து, இன்று பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி, தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்ற வகையில், அப்படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

பராசக்தி கதை வழக்கு

முன்னதாக பராசக்தி படம் தனது செம்மொழி என்ற கதையைத் திருடி படமாக எடுக்கப்பட்டதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனைக் கடந்த ஜனவரி 2 அன்று விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிடத் தடை இல்லை என்று தீர்ப்பளித்து, இணை இயக்குநர் ராஜேந்திரனின் கதையையும் படத்தின் திரைக்கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டது.

Summary

The Censor Board has given a U/A certificate to Sivakarthikeyan's film Parasakthi.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in