படையப்பா வெளிவந்து 25 வருடங்கள்: வெற்றி என்றால் அப்படியொரு வெற்றி!

பாட்ஷா, அண்ணாமலை படங்கள் பெற்ற வெற்றிகளையும் அதனால் உச்சிக்குச் சென்ற ரஜினியின் புகழையும் கட்டிக்காத்த மற்றொரு ரஜினி படம்...
படையப்பா வெளிவந்து 25 வருடங்கள்: வெற்றி என்றால் அப்படியொரு வெற்றி!

90களில் பாட்ஷா, அண்ணாமலை படங்கள் பெற்ற வெற்றிகளையும் அதனால் உச்சிக்குச் சென்ற ரஜினியின் புகழையும் கட்டிக்காத்த மற்றொரு ரஜினி படம் - படையப்பா. வெற்றி என்றால் அப்படியொரு வெற்றி. 1999 கோடைக்காலத்தில் படையப்பாவைக் கண்டுகளிக்காத தமிழ் சினிமா ரசிகரே இருந்திருக்க முடியாது என்கிற அளவுக்கு திரையரங்குகளில் ஏப்ரல், மே முழுக்கக் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்தார்கள். இந்தளவுக்கு இளைஞர்கள், தாய்மார்கள் என அனைவரையும் கவர்ந்த இன்னொரு ரஜினி படம் அதற்குப் பிறகு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு இயக்குநருடன் அமர்ந்து நிறைய விவாதிப்பார் ரஜினி. தன் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் தவறாமல் இடம்பெறவேண்டும் என்கிற பதற்றம் எப்போதும் அவருக்கு இருக்கும். அதனால் கதையை முழுவதுமாகச் செதுக்கிய பிறகே படப்பிடிப்புக்குச் செல்ல சம்மதிப்பார் ரஜினி. வாயில் மவுத் ஆர்கன், கையில் காப்பு என படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி. இளைஞர்களுக்குப் பிடித்தது போல இருக்கவேண்டும் என்பதால் முதல் பாதியில் உடை, ஸ்டைல் எல்லாம் அதற்கேற்றாற் போல இருக்கும். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பஞ்ச்லைன்களை எழுதும் பொறுப்பையும் அவரே எடுத்துக்கொண்டார். போடா, ஆண்டவனே நம்ம பக்கம் தான் இருக்கான், அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என்கிற வசனங்களை எழுதியவர் ரஜினி தான்.

ரஜினிக்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் ரஜினியையே ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரம் தான் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்தது, நீலாம்பரி. அப்படித்தான் இருக்கவேண்டும் என்று அக்கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் வருகிற நந்தினி கதாபாத்திரத்தின் வில்லத்தனங்களைக் கொண்டு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குங்கள் என்று கே.எஸ். ரவிகுமாரிடம் ரஜினி சொல்ல, அதன்படி அவர் உருவாக்கிய கதைதான் படையப்பா. படத்துக்கான தலைப்பையும் ரஜினியே சொல்லியிருக்கிறார். நீலாம்பரிக்குப் பெயர் வைத்ததும் ரஜினியே.

படையப்பாவுக்கு முன்பு ஹரா என்கிற கதையைச் சொல்லியிருக்கிறார் ரவிக்குமார். ஆனால் படையப்பா படத்தின் முழு திரைக்கதையையும் அறிந்தபிறகு எந்தக் கதையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் ரஜினிக்குக் குழப்பம் ஏற்படவில்லை. இந்தக் கதையை கிராமத்தில் எடுப்பதா, நகரத்தில் எடுப்பதா? நகரத்தில் திருமணத்துக்கு ஆண், பெண்ணிடம் சம்மதம் கேட்பது சகஜமாக இருக்கும். ஆனால் கிராமத்திலும் இதுபோல சம்மதம் கேட்பது கட்டாயமாக இருந்தால்? இந்தக் காரணத்துக்காகக் கிராமத்தில் இக்கதை நிகழ்வது தான் பொருத்தமாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

படத்தின் சிறப்பம்சம், முதல் பாதியில் ரஜினி இரு ஆண் வில்லன்களுடன் மோதி ஜெயிக்கவேண்டியிருக்கும். 2-ம் பாதி முழுக்க நீலாம்பரியின் கொட்டத்தை அடக்கவேண்டும். இதனால் ரஜினிக்குப் படத்தில் வெவ்வேறு வகையான சவால்கள் இருந்தன. நீலாம்பரி என்கிற வில்லியுடன் ரஜினி மோதுவதை அரசியல் கோணத்தில் வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள் என்று கூறியிருக்கிறார் ரவிக்குமார். இருவரும் அதற்கு முன்பு முதல்முதலாக இணைந்த முத்து படத்தில் மீனாவுக்கு எதிராக ரஜினி பேசிய வசனங்கள், ரசிகர்களால் எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் ரவிக்குமாரின் கேள்விக்கு ரஜினி சொன்ன பதில் - தமிழ்நாட்டில் மட்டும்தான் இதை அரசியல் பார்வையுடன் கவனிப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியேயும் நீலாம்பரி கதாபாத்திரத்தை ரசிக்கும்படி எடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் உள்ளே நுழைந்தது தனிக்கதை. நீலாம்பரி வேடத்துக்கு முதலில் பேசப்பட்டவர்கள் மீனாவும் சிம்ரனும் தாம். ஆனால் ரவிக்குமார், நட்புக்காக கதையைத் தெலுங்கில் எடுத்தபோது ஒரு முக்கியமான காட்சியில் மீனா வெளிப்படுத்திய நடிப்பு அவருக்கு ஏற்புடையதாக இல்லை. காதலிப்பதாக தான் ஏமாற்றி வருவதை கதாநாயகனிடம் சொல்லி, வில்லத்தனமான ஒரு பார்வையை வீசவேண்டும். ஆனால் அந்தக் காட்சியில் ரவிக்குமார் எதிர்பார்த்த நடிப்பு மீனாவிடமிருந்து வெளிப்படவில்லை. இந்த ஒரு காட்சியிலேயே அதிருப்தி நிலவும்போது நீலாம்பரி வேடம் முழுக்கவே வில்லத்தனம் கொண்டதுதான். எனவே முதலில் மீனாவைத் தேர்வு செய்துவைத்திருந்தாலும் பிறகு அவர் வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

சிம்ரன் எல்லாம் 1990களின் இறுதியில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தார். ரஜினி படம் என்றாலும் கூட அதிகத் தேதிகள் தர முடியாத நிலைமை. 90களில் ஐஸ்வர்யா ராயை தமிழ்ப் படங்களில் அடிக்கடிப் பார்க்க முடியும். ஹரா படத்தின் கதாநாயகி வேடத்துக்கு ஐஸ்வர்யா ராயைத்தான் தேர்வு செய்திருந்தார் ரவிக்குமார். ஆனால், இந்தப் படத்தில் வில்லி வேடம் என்பதால் ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். கதை விவாதத்தின்போது ரம்யா கிருஷ்ணனின் பெயர் அடிபட்டுள்ளது. போன் செய்து பார்த்தால், அப்போது அவர் கையில் எந்தத் தெலுங்குப் படங்களும் இல்லை. இதனால் உடனடியாக நீலாம்பரியாகத் தேர்வானார் ரம்யா கிருஷ்ணன். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். (மறைந்த சோவின் சகோதரி மகள் தான் ரம்யா கிருஷ்ணன். இவர் திரையுலகுக்குச் சென்றது சோவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் ரம்யா கிருஷ்ணன் நடித்ததில் அவர் பாராட்டிய ஒரே கதாபாத்திரம் - நீலாம்பரி.)

ரஜினியின் தந்தையாக யாரை நடிக்கவைப்பது? நாட்டாமை போன்ற ஒரு தோற்றத்தில் விஜய்குமார் ஏற்கெனவே நடித்துவிட்டார். இதனால் சிவாஜியைத் தேர்வு செய்தால் படத்துக்குக் கூடுதல் பலமாக இருக்கும் என எண்ணியுள்ளார் ரவிக்குமார். அவரிடம் கதை சொல்லி சம்மதமும் பெற்றுவிட்டார். ஆனால் சம்பளம் குறித்து ரவிக்குமாருக்குச் சில குழப்பங்கள் இருந்தன. ரஜினி தெளிவாகச் சொல்லிவிட்டார். சிவாஜி சாரிடம் சம்பளம் பற்றி பேசவேண்டாம். அவர் என்ன கேட்கிறாரோ, கொடுத்துவிடுங்கள்.

வில்லியாக தான் இல்லை, ரஜினிக்கு ஜோடியாக மீனாவைத் தேர்வு செய்யலாம் என்று யோசித்துள்ளார்கள். ஆனால் அவரும் சிம்ரன் போல பல படங்களில் அப்போது நடித்து வந்தார். அதற்கு முன்புதான் ரஜினிக்கு ஜோடியாக அருணாச்சலம் படத்தில் செளந்தர்யா நடித்திருந்தார். பரவாயில்லை மீண்டும் அதே ஜோடி தான் என முடிவெடுக்கப்பட்டு செளந்தர்யா தேர்வானார்.

18 வருடங்கள் கழித்து தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளியே வருகிறார் நீலாம்பரி. ரஜினியைச் சந்திக்கும் முக்கியமான காட்சி. தன் வீட்டுக்கு வரும் படையப்பாவை அவமானப்படுத்தவேண்டும். அது நாசூக்காக அதே சமயம் அது படையப்பாவுக்கு வலியைத் தரும் விதமாகவும் இருக்கவேண்டும். சண்டை போட முடியாது, பஞ்ச் வசனமும் சரிபடாது. என்ன செய்தால் அது படையப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும்? வீட்டுக்கு வந்த படையப்பாவுக்கு இருக்கை வழங்காமல் தன் முன்னால் நிற்கவைத்தால் அதை விடவும் வேறொரு அவமானம் இருக்குமா? முதலில் யோசித்தது, அந்தத் தருணத்தில் ரஜினி தானாக ஒரு இருக்கையை (சேர்) வேகமாக எடுத்து வந்து ரம்யா கிருஷ்ணன் முன்பு உட்கார வேண்டும் என்பதுதான். இந்தக் காட்சி சென்னையில் உள்ள ஒரு வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் ஓர் ஊஞ்சல் இருந்துள்ளது. உடனே ரவிக்குமார் அதை வைத்து காட்சியை மாற்றி எடுத்ததுதான் நாம் படத்தில் பார்த்தது. ரம்யா கிருஷ்ணன் முன்பு இருந்த ஊஞ்சலை கீழே இழுத்து அதில் ஸ்டைலாக ரஜினி அமர்ந்த காட்சிக்கு ரஹ்மான் அட்டகாசமான பின்னணி இசையை வழங்கினார். படையப்பாவின் ஆளுமையை வெளிப்படுத்திய முத்திரைக் காட்சி அது. (ரஜினிக்காக முதலில் யோசிக்கப்பட்ட சேர் காட்சி, பிறகு சிரஞ்சீவி நடித்த தெலுங்குப் படமொன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.) படத்தில் ரம்யா கிருஷ்ணன் பயன்படுத்தும் கார் - டொயோட்டா சியாரா. நட்புக்காக படத்தை இயக்கியபோது ரவிக்குமார் வாங்கிய கார் அது. ரெக்கை வைச்ச கார் என்று அதைக் குறிப்பிடும் ரஜினி, படத்திலும் ரம்யா கிருஷ்ணனின் காராகப் பயன்படுத்த யோசனை கூறியிருக்கிறார். நீலாம்பரி கதாபாத்திரத்தின் கெத்தைக் காண்பிக்க அந்த கார் பயன்படுத்தப்பட்டது.

கிராமத்துப் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும்போது அதன் வெற்றி உன்னிப்பாகக் கவனிக்கப்படும். படையப்பாவில் ரஜினி படத்துக்குத் தேவையான இசையைச் சரியாக வழங்கினார். கிக்கு ஏறுதே பாடல் படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகளுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. மின்சாரப் பூவே பாடல், ரஜினி படங்களில் உள்ள பாடல்களில் வேறுவகையாக இருந்தது. அந்தப் பாடலை முதலில் ஹரிஹரன் தான் பாடுவதாக இருந்தது. ஆனால், டிராக் பாடிய ஸ்ரீனிவாஸ் அருமையாகப் பாடினார். வெளிநாட்டிலிருந்து வந்து ஹரிஹரன் அப்பாடலைப் பாடிக்கொடுத்தாலும் ரஜினிக்கு ஸ்ரீனிவாஸின் குரலே சரியாக இருந்தது போல தோன்றியுள்ளது. கடைசியில் ஸ்ரீனிவாஸின் குரலே பயன்படுத்தப்பட்டது.

சிக்ஸ் பேக் இல்லாவிட்டாலும் ரஜினியின் உடற்கட்டைப் பார்த்து, வாட் ஏ மேன் என அப்பாஸ் வியப்பது போல ஒரு காட்சி கடைசியில் வரும். அது ரஜினியின் விருப்பத்துக்காக இணைக்கப்பட்ட காட்சி. படப்பிடிப்பில் ரஜினி பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததைப் பார்த்து அனைவரும் பாராட்டியுள்ளார்கள். எனில், சட்டையில்லாமல் ஒரு காட்சியில் நடிக்கிறேன் என ரஜினி விருப்பம் தெரிவித்து மேலும் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து அக்காட்சிக்குத் தயாராகியுள்ளார்.

ரஜினி படத்துக்கு கமல் உதவினார் என்பதே பெரிய தகவல் தான். ஆனால் ரஜினி, கமல் ஆகிய இருவருமே ரவிக்குமாரின் படங்களில் நடித்தவர்கள் என்பதாலும் ரஜினி - கமல் இடையே நீண்ட கால நட்பு உள்ளதாலும் படையப்பா படத்தின் நீளம் குறித்த முக்கிய முடிவு கமலின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது. பல கதாபாத்திரங்கள் கொண்ட கதை, முதல் பாதியிலும் 2-வது பாதியிலும் வெவ்வேறு வில்லன்கள், நிறைய பாடல்கள் என படத்தின் நீளம் 19 ரீல் வரைக்கும் சென்றுவிட்டது. எல்லாமே முக்கியமான காட்சிகள் என்பதால் எதையும் நீக்கவேண்டாம், வேண்டுமானால் 2 இடைவேளை விட்டுவிடலாம் என ரஜினி யோசனை சொல்லியிருக்கிறார். 2 இடைவேளை என்றால் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் கூட திரையிடுவது கடினமாகிவிடும் என யோசித்துள்ளார் ரவிக்குமார். பிறகு கமலுக்குப் படத்தைத் திரையிட்டுக் காண்பித்து இந்தச் சிக்கலைச் சொல்லியிருக்கிறார். இரண்டு இடைவேளையெல்லாம் வேண்டாம், கதையைப் பாதிக்காமல் சில காட்சிகளை வெட்டிவிட்டு, 14 ரீல்களாகக் குறைக்கவும் என அறிவுறுத்தியிருக்கிறார் கமல். இதன்பிறகு அப்படியே செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் படமாக்கப்பட்ட பல காட்சிகள் நீக்கப்பட்டன. 2-ம் பாதியில் சோகத்தில் உள்ள ரஜினியை செளந்தர்யா தேற்றும் காட்சி, ரஜினி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள், மணிவண்ணன் மகன்களின் காட்சிகள் என பல காட்சிகளை நீக்கியுள்ளார் ரவிக்குமார். நீக்கப்பட்டக் காட்சிகளை இன்றைக்கு நினைத்தாலும் பார்க்க முடியாது. சினிமா டிஜிடலாக மாறாத காலக்கட்டம் என்பதால் நீக்கப்பட்ட ரீல்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in