சண்டைக் கலைஞர் மரணம்: பா. இரஞ்சித்தின் நீலம் நிறுவனம் அறிக்கை | Pa. Ranjith

கடந்த ஞாயிறன்று அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.
சண்டைக் கலைஞர் மரணம்: பா. இரஞ்சித்தின் நீலம் நிறுவனம் அறிக்கை | Pa. Ranjith
2 min read

வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக, பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பா. இரஞ்சித் எழுதி இயக்கி வரும் படம் வேட்டுவம். ஆர்யா, ஷோபிதா துலிபாலா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் இதில் நடித்து வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படக்குழுவினர் கார் ஸ்டண்ட் காட்சிகளைப் படம்பிடித்து வந்துள்ளார்கள்.

மோகன் ராஜ் என்ற சண்டைக் கலைஞர் கார் ஸ்டண்ட் காட்சியை மேற்கொண்டிருக்கிறார். கார் பறப்பது போல படம் பிடித்திருக்கிறார்கள். இந்த காரில் இருந்த மோகன் ராஜ், கார் பறப்பது போன்ற ஸ்டண்ட் காட்சியில் உயிரிழந்துள்ளார்.

ஸ்டண்ட் காட்சியின்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்புடைய காணொளி வெளியாகியிருக்கிறது. காற்றில் பறந்த கார் மிக மோசமான நிலையில் கீழே விழுந்தைக் காணொளியில் பார்க்க முடிகிறது.

இதுதொடர்பாக பா. இரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மோகன் ராஜ் உயிரிழப்பு தொடர்பாக இன்று விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

"ஜூலை 13 அன்று காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துகள் என எல்லாம் இருந்தன. சண்டைக் காட்சிகளைத் திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.

ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரிழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.

செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். படப்பிடிப்பை நடத்த 3 நாள்களுக்கு அனுமதி பெற்ற நிலையில், 4-வது நாளாக அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Pa Ranjith | Pa. Ranjith | Mohan Raj | Vettuvam | Neelam Productions | Stunt Artist | Stunt Sequence | Action Sequence

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in