
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சந்தோஷ் திரைப்படத்தைத் திரையிட்டு கைதாவதற்குத் தயாராக இருப்பதாக இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக பி.கே. ரோஸி திரைப்படத் திருவிழா ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றது. இத்திரைப்படத் திருவிழாவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளியும் விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் வெளியிடத் தடை செய்யப்பட்டுள்ள சந்தோஷ் மற்றும் இதுவரை வெளியாகாமல் இருக்கும் நசிர் ஆகிய படங்களையும் இவ்விழாவில் திரையிட விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.
எனினும், இந்தப் படங்களைத் திரையிடுவதற்கு எதிர்ப்புகள் வந்ததையடுத்து, அவை திரையிடப்படாது என விழா ஏற்பாட்டுக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திரைப்படத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பா. இரஞ்சித் கலந்துகொண்டு பேசினார். சந்தோஷ் படத்தை வெளியில் திரையிடுவது குறித்து அவர் பேசியிருந்தார்.
"படங்களைத் திரையிடக் கூடாது என்று பிரச்னை வந்தது. காவல் துறையினர் தரப்பில் நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும், பிரசாத் லேப் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
சந்தோஷ் படத்தை இந்த விழாவில் திரையிடுவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால், நாம் வெளியில் திரையிடுவோம். வெளியில் திரையிட்டால் வரும் பிரச்னையை எதிர்கொள்வதற்கு நம்மிடம் சக்தி இருக்கிறது. நாம் அவ்வளவு பெரிய குற்றத்தைப் புரியவில்லை. இதை எதிர்கொள்ளலாம். சிறிது நாள்கள் சிறைவாசத்தை அனுபவிக்கலாம். 10 நாள்கள் சிறையில் இருந்தால், புத்தகங்களைப் படிக்கலாம். வேறொரு சூழல் என்பதால் சுவாரசியமாக இருக்கும். எனவே, கைதாவதற்குத் தயாராக இருக்கிறோம். சந்தோஷையும் நசீரையும் திரையிட்டு அந்தச் சம்பவத்துக்குத் தயாராவோம்" என்று பா. இரஞ்சித் பேசினார்.
பிரிட்டிஷ் இந்திய திரைக் கலைஞர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் சந்தோஷ். பிரிட்டன் சார்பில் கடந்தாண்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தணிக்கை வாரியம் ஒப்புதல் தரவில்லை. பல காட்சிகள்/வசனங்களை நீக்கச் சொல்லி தணிக்கை வாரியம் கோரிக்கை வைப்பதாக படத்தின் இயக்குநர் சந்தியா சூரி வேதனை தெரிவித்துள்ளார். நசிர் என்ற கோவையைச் சேர்ந்த இஸ்லாமியரை மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இது சர்வதேச திரைப்படத் திருவிழாவுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இதுவரை வெளியாகவில்லை. 2022-ல் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.