
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவருடைய மனைவி சாய்ரா பானு கூறியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். ரஹ்மானுக்கு நெஞ்சு வலி, கழுத்து வலி என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பதற்றம் அடைந்தார்கள்.
ஏ.ஆர். ரஹ்மானின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
நீர்ச்சத்துக் குறைபாடு உடைய அறிகுறிகளுடன் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஏ.ஆர். ரஹ்மான் இன்று வருகை தந்தார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார் என்று அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தன் கணவரின் உடல்நிலை குறித்து தகவல் அளித்துள்ளார். 29 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த வருட இறுதியில் ரஹ்மானும் சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்தார்கள். இச்சூழலில் ரஹ்மானின் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா பானு கூறியதாவது:
என்னுடைய பிரார்த்தனையில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளார். நானும் என்னுடைய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறேன். அவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் சாய்ரா பானு வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஏ.ஆர். ரஹ்மான் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவருக்கு நெஞ்சுவலி மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டதாக அறிந்தேன். அல்லாவின் ஆசியால் அவர் தற்போது நலமாக உள்ளார் என்றார். மேலும் ரஹ்மானுடன் பிரிந்து வாழ்வது குறித்தும் பேசியுள்ளார் சாய்ரா பானு. அவர் கூறியதாவது:
நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் இன்னும் கணவன் - மனைவியாக இருக்கிறோம், கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் பிரிந்தோம், அவருக்கு அழுத்தம் தர விரும்பவில்லை.
எனவே என்னை அவருடைய முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று அருள்கூர்ந்து அனைத்து ஊடகங்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நாங்கள் பிரிந்துதான் இருக்கிறோம். எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருக்கு இருக்கும். அனைவருக்கும், குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது - அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம், அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்.