
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் தனக்குப் பங்கு இல்லை என்றும், இதனால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் ராம்குமார்.
சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் ராம்குமாரின் ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3.74 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
கடன் தொகை திருப்பியளிக்கப்படாததால், தன பாக்கியம் எண்டர்பிரைசஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வட்டியுடன் சேர்த்து ரூ. 9.02 கோடியையும், `ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் அளிக்கும்படி கடந்த 2024-ல் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவுப்படி வட்டியுடன் சேர்த்து கடன் தொகை திருப்பி அளிக்கப்படவில்லை. இதை ஒட்டி, நிலுவையில் உள்ள கடன் தொகையான ரூ. 9.39 கோடியைப் பெறும் வகையில், ராம்குமார் தந்தை சிவாஜி கணேசனின் `அன்னை இல்லம்’ வீட்டை ஐப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தன பாக்கியம் எண்டர்பிரைசஸ்.
இதை ஏற்றுக்கொண்டு, `அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய நேற்றைக்கு முந்தைய தினம் (மார்ச் 3) உத்தரவிட்டார் நீதிபதி அப்துல் குத்தூஸ்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (மார்ச் 5) மீண்டும் விசாரணைக்கு நடைபெற்றபோது, ராம்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அது அவரது சகோதரர் பிரபு பெயரில் உள்ளது என்றும், இதனால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பதிலுக்கு, ராம்குமார் உரிமையாளராக இல்லாவிட்டால் வீட்டை எப்படி ஜப்தி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி குத்தூஸ், ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு அனுமதியளித்ததுடன், அதற்கு எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், செய்திகளின் மூலமாகவே இது சிவாஜி கணேசனின் வீடு என்று தெரிந்துகொண்டதாகவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தியும், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.